இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

43 0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பொல்பிதிகம பொலிஸ் பிரிவில் கும்புகுலாவ – இருதெனியாய வீதியில் வவ்லேவ பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் ஓரத்தில் இருந்த வடிகாணில் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பாக பொல்பிதிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விபத்தில் உயிரிழந்தவர் பொல்பிதிகம மேத உல்பத பகுதியைச் சேர்ந்த 43 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், கெஸ்பேவ பொலிஸ் பிரிவில் உள்ள கெஸ்பேவ-பண்டாரகம வீதியில் மாகந்தன பகுதியில், பண்டாகம திசையிலிருந்து கெஸ்பேவ திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து எதிர் திசையில் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் காலியைச் சேர்ந்த 28 வயதானவர் என தெரியவந்துள்ளது.