பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை

37 0

பிரெஞ்சு நகரமொன்றில், திடீரென கத்தியால் மக்களைத் தாக்கிய வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர்

தெற்கு பிரான்சிலுள்ள Marseille நகரில், நேற்று மதியம் திடீரென ஒருவர் இறைச்சி வெட்டும் இரண்டு கத்திகளால் சிலரைத் தாக்கியுள்ளார்.

பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை | Tunisian Stabbed 5 Person By Knife Shot By Police

தகவலறிந்த பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் பொலிசாரை நோக்கி கத்தியை ஓங்கியதாகவும், பொலிசார் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவர்களை நெருங்கியதாகவும், ஆகவே, அவரை பொலிசார் சுட்டுக்கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யார் அந்த நபர்?

அந்த நபர் துனிசியா நாட்டவரான 35 வயதுடைய நபர் ஆவார். அவர், கத்தியால் ஐந்து பேரை தாக்கியுள்ளார்.

தாக்குதல் நடத்தும்போது, இஸ்லாமிய மதம் சார்ந்த ஒரு வார்த்தையை சொல்லி சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

நடந்தது என்னவென்றால், அந்த நபர் ஹொட்டல் ஒன்றின் மேல் அமைந்திருக்கும் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

 

அவர் சரியாக வாடகை கொடுக்காததால், ஹொட்டல் மேலாளர் அவரை அறையை காலி செய்யவைத்துள்ளார்.

கோபமடைந்த அவர், தான் தங்கியிருந்த அறைக்கு புதிதாக வந்த நபரை கத்தியால் தாக்கியுள்ளார். பிறகு, 2.40 மணியளவில் ஹொட்டலின் மேலாளரையும், பின் அவரது மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

பின்னர் அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்ற அவர் அந்தக் கடையின் மேலாளரைத் தாக்க முயல, அங்கிருந்தவர்கள் அவரை துரத்தியடித்துள்ளார்கள்.

வெளியே வந்த அவர் மேலும் இருவரைத் தாக்க, தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் அவரிடம் ஆயுதங்களைக் கீழே போடும்படி சத்தமிட, பொலிசார் சொல்லச் சொல்லக் கேட்காமல் கத்தியை ஓங்கியபடி அவர்களை நெருங்கியுள்ளார் அவர்.

ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த மருத்துவ உதவிக்குழுவினர் தாக்குதல்தாரிக்கு சிகிச்சையளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவரால் தாக்கப்பட்டவர்கள் யாருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று திடீரென நிகழ்ந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல்தாரியால் மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுத்த பொலிசாருக்கு உள்துறை அமைச்சரான Bruno Retailleau பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.