நீல நிற பேரூந்தைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த நீல பேரூந்து ஒரு தரப்பினரை மாத்திரமே இலக்கு வைத்து பயணிக்கிறது. பொலிஸ், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடாது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (31) காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். அன்று பாராளுமன்றத்தில் ஆலோசனை தெரிவுக்குழுக்களில் இதற்காக நாம் குரல் கொடுத்தோம்.
அப்போதைய கால கட்டத்தில் மாகந்துரே மதுஷ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவ்வாறு ஊடக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பாப்பரசர் நாட்டுக்கு வருகை தந்ததைப் போன்றே இவர்கள் நள்ளிரவில் நாட்டை வந்தடைந்தனர்.
பாதாள உலகக் குழுவினரை வீரர்கள் போல் அழைத்து வருகின்றனர். இது சமூகத்தை தவறாக வழிநடத்துவதாகும். பொலிஸ் மற்றும் அமைச்சர் ஒருமித்து பணியாற்ற முடியாது. பொலிஸ் ஆணைக்குழு என்பது சுயாதீனமானதாகும்.
அரசியலமைப்பில் சுயாதீனமாக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், அமைச்சரொருவருடன் சென்று ஊடகத்தில் பிரசாரங்களை முன்னெடுப்பது சிறந்ததல்ல. இதே நிலைமை தொடர்ந்தால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபரையும் அமைச்சர் அழைக்கும் சூழல் ஏற்படும்.
அன்று கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு ஊடகப்பிரசாரங்களை முன்னெடுத்த போது பாராளுமன்றத்தில் நான் அதற்கெதிராக குரல் கொடுத்திருக்கின்றேன். அது மாத்திரமின்றி அப்போது பாதாள உலகக் குழுவினரில் ஒரு தொகுதியினர் மாத்திரம் சுதந்திரமாக விடப்பட்டனர்.
இன்றும் அவ்வாறான சூழல் ஒன்று உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிறந்தது. ஆனால் அதனை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்வது உகந்ததல்ல.
நீல நிற பேரூந்தைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த நீல பேரூந்து ஒரு தரப்பினரை மாத்திரமே இலக்கு வைத்து பயணிக்கிறது.
பொலிஸ், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடாது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
பாதாள உலகக் குழுக்களுடன் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்பிருப்பதாக அரசாங்கம் கூறியது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆதாரம் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

