இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகவுள்ளதால், ஜப்பானிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
சீனா பயணம் : முக்கியத்துவம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட வரி விதிப்பு என டிரம்ப் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சீனாவில் நடக்கவிருக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை (ஆகஸ்ட் 31 ) மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் தணியத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், எல்லைப் பிரச்சினைகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

