நாவின்ன துப்பாக்கிச் சூடு ; பிரதான துப்பாக்கிதாரி கைது!

61 0

மஹரகம, நாவின்ன பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மஹரகம, நாவின்ன பகுதிக்கு ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், இராணுவ சிப்பாய் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இராணுவ சிப்பாய் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கட்டுக்குருந்த இராணுவ முகாமில் கடமையாற்றும்  28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் ஆவார்.

காயமடைந்த இராணுவ சிப்பாய் தெஹிவளை , களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கொட்டாவை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.