பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம்

60 0

பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 175-வது ஆண்டு பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.

இதில், பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறைக்கு மாறுவது காலத்தின் கட்டாயம் என சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த வலியுறுத்தினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சம்மேளனத்தின் 175 ஆண்டுகால பாரம்பரியம் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தனியார்மயமாக்கப்பட்ட நிலையில், துறை அடைந்த முன்னேற்றங்கள் குறித்து சுனில் பொஹொலியத்த பேசினார்.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) மூலதனம் ரூபா 8 பில்லியனிலிருந்து ரூபா 113 பில்லியனாக அதிகரித்துள்ளதையும், சராசரியாக ரூபா 136 பில்லியனை மொத்த முதலீடாக ஈர்த்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்

அவர் தனது உரையில், துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பட்டியலிட்டு, அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். அதில்,

பாம் ஒயில் தடை குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தினசரி கூலி முறையிலிருந்து உற்பத்தி சார்ந்த ஊதிய முறைக்கு கட்டாயம் மாற வேண்டும்.

அளவைக் கருத்தில் கொண்டு தோட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

2045ஆம் ஆண்டுக்கான காலக்கெடுவை முன்கூட்டியே தெளிவுபடுத்தி, நீண்டகால நடவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் மூலம், பெருந்தோட்டத் துறையின் எதிர்கால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டத் துறையின் முக்கியத்துவத்தை பாராட்டினார்.

சுமார் 1.5 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணிக்கும் இத்துறை ஆதரவாக இருப்பதைக் குறிப்பிட்டார்.

இருப்பினும், கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து தேயிலை உற்பத்தி சிறிதளவு மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், ரப்பர் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 100,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இச்சூழலில், துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பின்வரும் நடவடிக்கைகளை அவர் அறிவுறுத்தினார்:

போட்டியிடும் திறனுள்ள, நிலையான ஊதியத்தை ஏற்றுக்கொள்வது.

இயந்திரமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை விரைவுபடுத்துவது.

பொது-தனியார் கூட்டாண்மைகள் (PPP) மற்றும் குத்தகை நிலங்கள் மூலம் உற்பத்தியை பன்முகப்படுத்துவது.

மானியங்களை நம்பியிருக்காமல் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பது.

மேலும், வரவிருக்கும் PPP திட்டங்கள் மற்றும் அரசாங்க நிறுவன சீர்திருத்தங்கள் புதிய முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், பொருளாதாரத்தின் அடிப்படைகளை மேம்படுத்துவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் புதிய முதலீடுகளை ஊக்குவிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.