யால தேசிய பூங்காவின் புட்டவ நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள வலயம் 01 இல் யானை குட்டி ஒன்று வலையில் சிக்கியதால் அதன் காலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூங்கா காப்பாளர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு கால்நடை வைத்தியர்கள் நேற்று புதன்கிழமை (27) யானைக்கு அவசர வைத்திய சிகிச்சை அளித்ததாக வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலில் பலத்த காயமடைந்த யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
வனவிலங்கு கால்நடை வைத்தியர் கே. தம்மி, லுனுகம்வெஹெர சுகாதார அபிவிருத்தி மைய அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.
வலையில் சிக்கிய காட்டு விலங்குகள் கடுமையான வலியை அனுபவிப்பதாகவும், சிக்கியவுடன் உடனடியாக அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போவதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
எனவே, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு தகவலையும் அவசரகால வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் 1992 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இதனால் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

