இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) காலை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா (SHRI JAGAT PRAKASH NADDA) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அனுப்ரியா படேல் (SMT. ANUPRIYA PATEL) ஆகியோரை சந்தித்து இரு நாடுகளின் சுகாதார சேவைகள் குறித்து கலந்துரையாடினார்.
நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள், மருந்து விநியோகத் திட்டம், சுகாதார அமைப்பினை டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெறுதல் குறித்து இரு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
இந்திய அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், தொற்றா நோய்களின் சவாலை எதிர்கொள்ள, ஒவ்வொரு 3,000 – 5,000 பேருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை நிறுவும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், தற்போது இது போன்ற சுமார் 1,50,000 ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவி அந்த ஆரம்ப சுகாதார மையங்களின் தரத்தை மேம்படுத்தும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து, இந்தியாவில் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத் திட்டத்தை நளிந்த ஜயதிஸ்ஸ பார்வையிடவுள்ளார்.





