இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்!

46 0

இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

அவையாவது,

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்கள், ஜெனீவா.

மேன்மைதங்கியவர்களே,

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் – HRC 57/1 இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக செப்டம்பர் 2024 இல் 57 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி 57/1 தீர்மானத்தின் காலம் செப்டம்பர் 2025 இல் 60 ஆவது அமர்வோடு முடிவடைகின்றது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட – தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற – முதன்மை அரசியல் கட்சி நாங்கள்தாம்.

(1949 இல் தொடங்கப்பட்டதிலிருந்து சமஷ்டிக் கட்சி என்று நம் கட்சி அழைக்கப்படுகிறது). அந்த வகையில் எங்கள் மக்களின் சில தீவிரமான கவலைகளை உங்கள் முன் வைப்பது எங்கள் கடமையாகக் கருதுகிறோம். வரலாற்று ரீதியாக நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்டு தமிழ் மக்கள் இலங்கையில் முற்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர், நாங்கள் எங்களுடைய சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட வேறுபட்ட மற்றும் தனித்துவமான மக்கள்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்துக்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். அதே நேரத்தில் சிங்களவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள். ஐரோப்பியர்கள் இந்தத் தீவை வெற்றிகொள்ள முன்பு இந்த தீவில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன, அவற்றில் ஒன்று வடகிழக்கில் உள்ள தமிழ் ராஜ்ஜியம். பிரிட்டனிடமிருந்து (1833 இல் நிர்வாக வசதிக்காக மூன்று அலகுகளையும் இணைத்த பிரிட்டனிடமிருந்து) சுதந்திரம் பெற்ற நேரத்தில், ஒரு எளிய பெரும்பான்மை வகை அரசமைப்பு இங்கு இயற்றப்பட்டது.

பின்னர் ஓர் அரசமைப்பால் அது மாற்றப்பட்டது. அது இலங்கையை ஓர் ‘ஒற்றையாட்சி நாடாக’ அங்கீகரித்து. பௌத்தத்திற்கு ‘முதன்மை இடம்’வழங்கியது.

மேலும் அது அரசமைப்பு ரீதியாக சிங்களத்தை மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரித்தது. இவை மற்றும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பிற பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள், காலனித்துவ சக்திகளிடம் இழந்த நமது இறையாண்மையை மீட்டெடுக்கக் கோருவதற்கு 1976 இல் எங்களைத் தூண்டின. இந்தக் கோரிக்கை பின்னர் அந்த நோக்கத்தை அடைவதற்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

இருப்பினும், அந்த ஆயுதப் போராட்டம் பாதுகாப்புப் படைகளால் இழைக்கப்பட்ட கடுமையான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற சர்வதேச குற்றங்களுடன் 2009 இல் ஒடுக்கப்பட்டது. இந்த சர்வதேச குற்றங்களில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையும் அடங்கும். அது, பல தசாப்தங்களாக வேண்டுமென்ற நோக்கத்துடன் மக்கள் மீது நடத்தப்பட்டு, போரின் கடைசி கட்டத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளில் உச்சக்கட்டத்தை அடைந்ததது.

மிக சமீபத்தில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. 150 எலும்புக்கூடு எச்சங்கள் – அவற்றில் 96 வீதமானவை ஒட்டுத் துணிகள கூட இல்லாமல் – ஒரு சிறிய சதுக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியை ஸ்கேன் செய்ததில் இன்னும் பல உடல்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளமை தெரிய வந்தது.

விசாரணைகளை அமைப்பதற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை தீவிரமாக பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

2. போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர, அதற்கு மேல் இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலை நோக்கத்தை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை சேகரிப்பதையும் இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் நோக்கமாக விரிவுபடுத்த வேண்டும். இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் இந்த ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை விசாலமான நோக்கத்துடன் தொடரப்பட வேண்டும். மேலும் திட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும்.

3. பாதுகாப்பு கவுன்ஸில் தீர்மானத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் பரிந்துரைத்தபடி ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு அங்கீகரிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

4. மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களுடன் புதிதாக பேச்சு நடத்தி, இணக்கம் கண்டு, வடக்கு – கிழக்கில் விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசமைப்பை இயற்ற இலங்கையை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக, மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

நன்றி,

சி.வி.கே. சிவஞானம் தலைவர், அவைத் தலைவர்,வடமாகாண சபை 

எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி பொதுச் செயலாளர் 

எஸ். ஸ்ரீதரன் (எம்.பி.) பாராளுமன்ற குழு தலைவர் 

ஜி. ஸ்ரீநேசன் (எம்.பி.) 

கே.கோடீஸ்வரன் (எம்.பி.) 

சாணக்கியன் ராசமாணிக்கம் (எம்.பி.) 

கே.எஸ். குகதாசன் (எம்.பி) 

து. ரவிகரன் (எம்.பி.)