பிமல் ரத்நாயக்கவின் கூற்று அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது

42 0

ரணில் விக்கிரமசிங்க 40 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கூற்றிலிருந்தே அவர்களின் அரசியல் பழிவாங்கல் நோக்கம் வெளிப்படுகிறது. ஆளுந்தரப்புக்கு ஒரு சட்டத்தையும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் பொலிஸை பகிரங்கமாக விமர்சிப்போம் என தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் கூறிக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்க 40 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கூற்றிலிருந்தே அவர்களின் அரசியல் பழிவாங்கல் நோக்கம் வெளிப்படுகிறது. பழைய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட காரணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி பழிவாங்கல்களுக்கு உட்படுவாரெனில் அது தவறாகும்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க குற்றவாளியென டில்வின் சில்வா கூறுகின்றார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து இராணுவ முகாம் மீது தாக்குதல்கள் மேற்கொண்டமைக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற டில்வின் சில்வா தான் இன்று ரணிலை குற்றவாளியென்கின்றார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

நாட்டின் ஜனநாயகம், பிரஜைகளின் உரிமைகள் குறித்து பேச வேண்டியது சட்டத்தரணிகள் என்ற ரீதியில் எமது கடமையாகும். எனவே எமது குரலை ஒருபோதும் முடக்க முடியாது தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளுக்கு கூறிக் கொள்கின்றோம். லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக குறித்த பல்கலைக்கழகத்தினால் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை தனிப்பட்ட விஜயம் எனக் குறிப்பிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளமையானது நாட்டில் இராஜதந்திர விஜயங்கள் குறித்த சம்பிரதாயத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் ஜனாதிபதியொருவருக்கு தனிப்பட்ட நேரம் என்ற ஒன்று கிடையாது. அவர் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் ஜனாதிபதியே. உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாடு சென்றாலும் அவர் ஜனாதிபதியே.

இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆவணமும் இலங்கை ஜனநாயக குடியரசின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாகவே செயற்பட்டுள்ளது. ஆனால் கல்கிஸை நீதிவான் வசந்த சமரசிங்கவிடம் வாக்குமூலம் பெற்று தன்னிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்காக அதனை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவ்வாறெனில் தற்போது ஆளுந்தரப்புக்கு ஒரு சட்டமும் எதிர்க்கட்சிகளுக்கு பிரிதொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பக்க சார்பாக சட்டம் நடைமுறைப்படுகின்றமை தொடர்பில் நாம் பொலிஸாரை மேலும் பகிரங்கமாக விமர்சிப்போம் என தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் கூறிக் கொள்கின்றோம் என்றார்.