நிறைவேற்றதிகாரத்தின் ஏகபோகத்திற்கு உட்படுத்தும் அரசாங்கம்

48 0

புலனாய்வுத்துறையில் தமது அரசியல் ஆளுமைகளைக் கொண்டு நிரப்பி அதனை அடிபணியச் செய்வதன் மூலம் அரச பொறிமுறையில் காணப்பட வேண்டிய சுதந்திரத்தை சிதைத்து அவற்றை நிறைவேற்றதிகாரத்தின் ஏகபோகத்திற்கு அரசாங்கம் உட்படுத்துகிறது. தமக்கெதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் முடக்குவதற்கும் அரசாங்கத்திடம் வேறு மாற்று நடவடிக்கைகள் இல்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று, அரசாங்கம் அதன் அடக்குமுறை அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அடக்கி, அடிபணிய வைத்து, மௌனமாக்குவதற்கு அரச சேவையில் காணப்பட வேண்டிய சுயாதீனத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி பொலிஸ், இலஞ்ச , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன செயற்படுகின்றன.

புலனாய்வுத்துறையில் தமது சொந்த அரசியல் ஆளுமைகளைக் கொண்டு நிரப்பி அதனை அடிபணியச் செய்வதன் மூலம் அரச பொறிமுறையில் காணப்பட வேண்டிய சுதந்திரத்தை சிதைத்து அவற்றை நிறைவேற்றதிகாரத்தின் ஏகபோகத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்று நம்புகின்றோம். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் முடக்குவதற்கும் அரசாங்கத்திடம் வேறு மாற்று நடவடிக்கைகள் இல்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.

ஒரு அரச தலைவரின் கடமைகளுக்கும் தனிப்பட்ட செலவுகளுக்கும் இடையே தெளிவான கோட்டை வரையறுப்பது எளிதானதல்ல. இந்நிலையில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாத ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைத்திருப்பது ‘பல கட்சி அரசியலையும் ஜனநாயகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்’ ஒரு செயல்முறையாகும்.

விசாரணை செயல்முறை முழுமையடையாத சூழலில், பிணையில் வெளிவர முடியாதவாறு குற்றஞ்சுமத்தி ஒருவரை சிறையில் அடைப்பதன் மூலம், சட்டத்தின் ஆட்சி நீண்ட காலத்துக்கு வீழ்ச்சியடைய வழி வகுக்கும். பொலிஸ் உட்பட சட்டப்பூர்வ நிறுவனங்களால் நடத்தப்படும் சுயாதீன புலனாய்வு விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது, இவ்வாறு சட்டத்துறை செயல்முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் கவலை தெரிவிக்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு அரசியல் நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றே கருதுகின்றோம். குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான உண்மையான தகவல் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளகக் கட்டுப்பாட்டுப் பிரிவால் தயாரிக்கப்பட்டது. இது மக்கள் விடுதலை முன்னணி ஆர்வலர்களின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டதாகவும், ரணில் விக்கிரமசிங்கவை சிக்க வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமிடல் என்றும் தெரியவருகிறது.

ஜனாதிபதி செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கணக்காய்வாளரினால் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, அதன் பின்புலத்திலுள்ள அரசியல் நோக்கம் தெளிவாகிறது. இலங்கையில் சட்டத்துறை நீதித்துறை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நிர்வகிக்கும் சட்ட நடைமுறைகள் உள்ளன. இருப்பினும், விசாரணை முடிவடைவதற்கு முன்பே வழக்கில் 38 சாட்சிகளைக் கைது செய்து ஆஜர்படுத்துவது நாட்டின் நீதித்துறை அமைப்பின் நடைமுறைகளுக்கு முரணானதாகும்.

மேலும், இந்த முறைப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் மாநாடுகளை நடத்திய முன்னாள் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன. பின்னர் அரசியல் தேவைகளுக்காக பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள், அரசியல் நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்கிறார்கள், இது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் பெரும் செல்வாக்கை செலுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தமை மற்றும் பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைப்பதற்காக நடவடிக்கையானது , பிணையில் வெளிவர முடியாத குற்றத்திற்காக கைது செய்து காவலில் வைப்பது, ‘அரசியலமைப்பு ஏகபோகத்தை நோக்கி முன்னேறும்’ பல கட்சி அரசுகளுக்கு எதிரான நடைமுறையாகும். இது அரசியலமைப்பை ஏகாதிபத்தியத்தை நோக்கிக் கொண்டு செல்லும் பல கட்சி அரசியல் எதிர்ப்பு நடவடிக்கையாகும்.

பல கட்சி ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாக்க அரச பொறிமுறை வழிநடத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இந்த செயன்முறைக்கு எதிரான எமது வலுவான எதிர்ப்பையும் கவலையையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் இந்த முழு செயல்முறையையும் நாம் கண்டிக்கின்றோம்.