சூறாவளி காற்றினால் சிக்னல்கள் பழுதானதால் ரெயில்கள் 5 மணி நேரம் நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் சிக்னல் சரிவர இயங்கவில்லை. எனவே கடல் பாலத்தின் வழியாக ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பாம்பன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பயணிகளின் பாதுகாப்பை கருதி அந்த ரெயில் புறப்பட அனுமதி வழங்கப்படவில்லை.
இதேபோல் மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரெயிலும், மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. வாரணாசியில் இருந்து ராமேசுவரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் உச்சிப்புளி நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்து ரெயில் சிக்னல்கள் சீராக சுமார் 5 மணி நேரம் ஆனது. இதனால் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். இரவு 9.20 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வர வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2.24 மணிக்கு வந்து சேர்ந்தது.

