கடந்த 17.08.2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாணி திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்களின் தமிழ்த் தேசியப்பணியைப் பாராட்டும் விழா 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரேற்றி வைக்க விழா தொடங்கியது.
தமிழ் மாணி திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்கள் தமிழினத்தின் பாண்பாடு தழுவி மாலை அணிவித்துக் குடும்பத்தினரோடு வரவேற்கப்பட்டார். பாராட்டும் விழாவிலே மங்கல விளக்கினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின்; பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், றைன்லாண்ட் பாள்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன் மற்றும் தமிழாலயத்தின் பெற்றோர் பிரதிநிதி திருமதி ரட்ணமாலா விஜயரட்ணம் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கம், தமிழாலயப்பண், வரவேற்பு நடனம் என்பவற்றைத் தொடர்ந்து உதவி நிருவாகி திரு. அப்பையா தேவதாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வரவேற்புரையை அடுத்து நிறைபணியாற்றலாளரை அவரது துணைவியாரோடு இணையராக அழைத்துவந்து அரங்கிருத்தியமையைத் தொடர்ந்து, தமிழாலயத்தின் மாணவர்கள் சார்பில் செல்வி நிஷா பிறேமானந்தன் அவர்களின் கவிதையும் செல்வன் சோபித் கேதீஸ்வரன் அவர்களின் உரையும் இடம்பெற்றன. முன்னாள் மாணவர்கள் சார்பில் செல்வி அனுஷா பிறேமானந்தன் உரையாற்றினார். தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ.மனோகரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி ஆகியோரின் பாராட்டுரைகள் இடம்பெற்றன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து வாழ்த்துரைகளை றைன்லாண்ட் பாள்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு.சபாபதி விமலநாதன், தமிழாலய ஆசிரியர் குழாம் சார்பில். ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் சிவானந்தன், தமிழாலயப் பெற்றோர் பிரதிநிதி திருமதி ரட்ணமாலா விஜயரட்ணம், லண்டவ் நகரப் புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் இரண்டாவது துணைத் தலைவரான றீ றின் வூங் ஆகியோர் வழங்கினர்.
பாராட்டுவிழாவின் முத்தாரமாக தமிழ் மாணி திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்கள் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து திரு. அப்பையா தேவதாஸ் அவர்கள் லண்டவ் தமிழாலயத்தின் புதிய நிருவாகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இடைவேளையை அடுத்து றைன்லாண்ட் பாள்ஸ் மாநிலத் துணைப் பொறுப்பாளர் திரு.க.பூபால் மற்றும் சுள்ஸ்பாக் தமிழாலய நிருவாகி திரு. குமாரவேலு தேவகுமார், சார்புறுக்கன் தமிழாலய நிருவாகி திருமதி ஜெகதீஸ்வரி ராஜரட்ணம், முன்சன் தமிழாலய நிருவாகி திரு. நாகராசா நிர்மலதாசன் ஆகியோரின் பாராட்டுரைகள், வாழ்த்துப் பகிர்வுகள் மற்றும் நன்றிநவிலல் என நடைபெற்ற விழாவில், அயல் மாநிலங்களின் தேசிய மற்றும் தமிழாலயங்களின் செயற்பாட்டாளர்கள் இணைந்திருந்தனர். தமிழினத்தின் வேணவாவை அடையும் நம்பிக்கையோடு தமிழர் தாயகத்தை மனதிருத்தி, நிறைபணிப் பாராட்டு விழாச் சிறப்பாக நிறைவுற்றது.






















































































