நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) காலை தேசிய வைத்தியசாலைக்கு சென்றார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட்டு அங்கிருந்து வெளியேறும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் பெற்றுத்தரப்படும் தீர்ப்புக்கள் மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் பல நாட்களுக்கு முன்பே, அரசியல் கட்சி சார் யூடியூப் ஆர்வலர்கள் முன்கூட்டியே எவ்வாறு கருத்து வெளியிடுவர் என்பது குறித்து பிரச்சினை காணப்படுகின்றது.
இவ்வாறான விடயமொன்று நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
முறைமையில் மாற்றத்தைக் (சிஸ்டம் சேன்ஞ்ச்) கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறோம்.
அரசியலமைப்பின் சட்டங்கள் அல்லது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.
நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரு அரசியல் யூடியூபர் முன்கூட்டியே அறிவிப்புச் செய்ய முடியாது.
சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் மட்டுமே இதுபோன்ற ஒரு விடயம் நடக்கும்.
ஆனால் நம்மைப் போல ஜனநாயக ஆட்சி செய்யும் நாட்டில் இதுபோன்ற ஒரு விடயம் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு யூடியூப் சேனல், கைது செய்யப்படவிருக்கும் நபரின் பெயர், கைது செய்யப்படும் திகதி மற்றும் அவர் சிறையில் கழிக்கப்போகும் நாட்களின் எண்ணிக்கையைக் கூட முன்கூட்டியே வெளியிடுவதானது, நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
யூடியூப் சேனல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. சட்டத்தை அமுல்படுத்துவதில் சகலரையும் சமமாக நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமல்ல.
என்றாலும், அரசியல் யூடியூபர்கள் நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவது சட்ட ஒழுங்கு முறையில் அமைந்த விடயமொன்றல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

