இலங்கையில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரம் என்பன அடக்குமுறைக்குட்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தில் சனிக்கிழமை (23) கடிதமொன்றின் ஊடாக காவிந்த இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தற்போதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் என்பன அடக்குமுறைக்குட்படுத்தப்படுகின்றன.
அவற்றில் முன்னாள் அரச தலைவர்களும் உள்வாங்கப்பட்டு;ள்ளனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளமை அவரது அரசியல் சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும்.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் கோருகின்றோம்.
எம்மால் கையளிக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதி ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதே ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தனித்து விடப்பட மாட்டார். நாம் என்றும் அவருடன் நிற்போம் என்றார்.

