ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபரான துப்பாக்கிதாரியை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பூகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (21) அனுமதி அளித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை நாகரவெவ பகுதியில் மறைந்திருந்தபோது, சந்தேக நபர் நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பரவகும்புகவைச் சேர்ந்த 34 வயதான முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபர், அவிசாவளை மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி மனித கொலை செய்ய முயற்சித்துள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மிமீ தோட்டாக்களை பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியும், நான்கு தோட்டாக்களும், 12 போர ரக தோட்டாக்களை பயன்படுத்தக்கூடிய இரண்டு துப்பாக்கிகளும், 6 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

