கசினோக்களை அமைத்து கஞ்சாவை பயிரிட்டு பொருளாதாரத்தை வளர்க்கப் போவதாக கடந்த அரசாங்கத்தை விமர்ச்சித்தவர்கள் தற்போது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்திற்குள் கசினோவையும் கஞ்சாவையும் இணைத்துள்ளனர். இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரச வருமானம் தொடர்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அதிகளவில் வரிகளை அறவிட்டு மக்கள் மீது வரிச் சுமைகளை சுமத்துகின்றனர். இவ்வாறு மக்கள் மீது வரிகளை அறவிட்டு அரச வருமானம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த வருமானத்தால் மக்களுக்கு என்ன கிடைக்கின்றது. மின் கட்டணத்தை குறைப்பதாகவும், உர மானியங்களை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அரிசியும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தேசிய விவசாயிகளின் நிலைமை தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்ப்பதில்லை. அதிகரித்த அரச வருமானத்தில் மக்களுக்கு என்ன கிடைத்தது.
எதுவும் இல்லை.அன்று எங்களை பார்த்து கொள்ளையடிப்பதாக கூறினர். அது போன்று நாங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்லை. சில இடங்களில் நடப்பது தொடர்பில் கூடிய விரைவில் தெரியவரும்.
கசினோக்களை அமைத்து கஞ்சாவை பயிரிட்டு பொருளாதாரத்தை வளர்க்கப் போவதாக கடந்த அரசாங்கத்தை பார்த்து விமர்ச்சித்தவர்கள் இப்போது தங்களின் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்திற்குள் கசினோவையும் கஞ்சாவையும் இணைத்துள்ளனர்.
எங்களை விடவும் அதிகமாக அதனை சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும்.
கடற்படை தளபதியை அடையாளம் காண்பதற்காக விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களை கொண்டுவந்து கடற்படை தளபதியை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மறுபக்கத்தில் வடக்கில் ஹர்த்தால் நடக்கும் போது வேறு கொள்கையை பின்பற்றுகின்றனர்.இதேவேளை அரசாங்கம் அரச வருமானத்தை அதிகரித்துள்ளதாக கூறுகின்றது.
ஆனால் அதனால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியென்றால் அந்த வருமானத்துக்கு என்னவாயிற்று என்று கேள்வியெழுப்பினார்.

