ஊதியம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
சனிக்கிழமை ஏர் கனடா நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் 10,000க்கும் அதிகமானோர் ஊதியம் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தங்கள் வேலைநிறுத்தத்தைத் துவங்கினார்கள்.
வேலைநிறுத்தத்தால், நாளொன்றிற்கு 130,000 பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து விமான சேவை துவங்க இருப்பதாகவும் ஏர் கனடா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இன்று, அதாவது, ஆகத்து மாதம் 19ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலையே விமான சேவைகள் துவங்க இருப்பதாகவும் ஏர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்றாலும், விமான சேவை முழுவீச்சில் இயங்க ஏழு முதல் 10 நாட்கள் ஆகலாம் என்றும் கூறியுள்ள ஏர் கனடா நிறுவனம், இந்த காலகட்டத்தில் சில விமானங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

