வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கெதிராக எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கக்கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, இராணுவமுகாமிற்குச் சென்ற ஐவரில் ஒருவரான 32வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு காணாமல்போயிருந்தவர் கடந்த 09.08.2025அன்று முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, கடந்த 09.08.2025அன்று மேஜர் தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இரு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவமும், அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தின் முறையற்ற செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதமிஞ்சிய இராணுவமயமாக்கமுமே காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இராணுவத்தினர் தேவையற்றவிதத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணிவந்துள்ளனர். அத்தோடு அப்பகுதி மக்களின் வறுமைநிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை முறைகேடான, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் தூண்டிவிட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திவந்துள்ளனர்.
அந்தவகையில் இராணுவத்தினரால் அப்பகுதி இளைஞர்களுக்கு இராணுவமுகாமிலுள்ள பொருட்கள், தளபாடங்கள், எரிபொருள் என்பவற்றுடன் இராணுவத்தினரால் காட்டுமிருகங்கள் வேட்டையாடப்பட்டு இப்பகுதி இளைஞர்களிடம் விற்பனைக்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதி மக்களாலேயே எமக்கு முறையிடப்பட்டது.
இவ்வாறு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு மாற்றீடாக போதைப்பொருட்களைப் பெற்றுத்தருமாறு 63ஆவது இராணுவமுகாம் இராணுவத்தினர் அப்பகுதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளனர்.
இவ்வாறாக இராணுவத்தினரின் முறையற்ற செயற்பாடுகள், தொடர்பாடல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கின்றது.
இவ்வாறாக அப்பகுதி இளைஞர்களுடன் முறையற்றவிதத்தில் தொடர்பினைப் பேணிவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் மூவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே முற்றுமுழுதான பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர்.
மேலும் அதிகரித்த இராணுவப் பிரசன்னமென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது.
யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகளாகியுள்ளநிலையில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான அதிகரித்த இராணுவப்பிரசன்னம் தேவையற்ற ஒன்றாகும்.
இவ்வாறாக யுத்தம் மௌனித்து ஒன்றரைத் தசாப்தகாலம் கடந்துவிட்ட சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதேவேளை இவ்வாறு வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப்பரப்பில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் இடம்பெறக்கூடிய கொடூரமான சம்பவங்களையும் தொடர்ந்தும் எம்மால் அனுமதிக்கமுடியாது.
எனவேதான் வடக்கு, கிழக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை(18) வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் தழுவியரீதியில் பூரணகர்த்தாலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கர்த்தாலுக்கான ஆதரவைநல்குமாறு கோரியுள்ளேன்.
அதேவேளை வன்னி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிஎன்ற வகையில் வன்னியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பிலுள்ள அனைவரும் இந்த பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவுநல்கி வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எமது முழுமூச்சான எதிர்ப்பினை காண்பிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றேன்.
மேலும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகள் ஆகியுள்ளசூழலில் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் எமது மக்களை வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்திலுள்ள எமது மக்கள் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளைப்போல தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பில், அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு மத்தியில் ஓர் அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள்.
எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எமது மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்களைப்போல இராணுவப் பிரசன்னமில்லாது சுதந்திரமாக வாழவேண்டுமென்ற அடிப்படை மனித உரிமையினையே நாங்கள் கோருகின்றோம். அதற்காகவே இந்த வடக்கு, கிழக்குரீதியிலான பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இந்நிலையில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 18.08.2025அன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்குத்தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுஆதரவினை நல்குவதன் ஊடாக, வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்ற எமது அடிப்படை மனிதஉரிமைக் கோரிக்கையினை முழுசர்வதேசத்திற்கும் வலுவாக முன்வைப்போம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

