சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கொலைக் குற்றவாளிகள்!

48 0

நாட்டில் ஒருபுறம் கொலைகாரர்களும் குற்றவாளிகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி  வரும் அதே வேளையில், மறுபக்கமாக ஜனநாயக ரீதியில் அமைந்து காணப்படும் நிறுவனங்களின் அதிகாரங்களை ஜே.வி.பி பலவந்தமாக கைப்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவான உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,

பலவீனமான, வினைத்திறனற்ற அரசாங்கமே இன்று நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் தினமும் மனிதக் கொலைகள் நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நாட்டில் உறுதி செய்யப்படாத நிலையே இன்று காணப்படுகின்றன.

பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் சமூகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கத்திடம் முறையான திட்டமோ அல்லது செயல் ஒழுங்கோ இருப்பதாக தென்படவில்லை. சமூகத்தை ஒரு பக்கம்  கொலைகாரர்கள் தமது கைகளில் எடுத்து வரும் தருணத்தில், மறுபக்கத்தில் அரசியல் ரீதியாக முழு சமூகத்தையும் தமது கைகளில் எடுப்பதற்கு ஆளும் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

நாம் செல்லும் இடங்கள் எல்லாம், சிவில் பாதுகாப்புக் குழுக்களும், ஊர்காவல் குழுக்களும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலை இதற்கு முன்பு நடந்ததில்லை. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் பிரதேச சபைகளின் ஊடாக இளைஞர் கழகங்களை தாபிக்கும் நடவடிக்கைகளிலும் இதுதான் நடந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த முயற்சியாக விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் மகளிர் சங்கங்களின் அதிகாரங்களை  பெறுவதாக காணப்படுகின்றன.

இறுதியில், இந்த ஆளும் தரப்பினர் மரண உதவி சங்கங்கள், பரிபாலன சபைகளினது அதிகாரங்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி, விகாரைகளில் எந்த பிக்கு விகாராதிபதியாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது. இந்த ஜனநாயக சமூகத்தில் எதோச்சதிகாரம் மேலோங்க நாம் இடமளிக்க முடியாது என்றார்.