பேருந்து இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை

59 0

நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் இயந்திரத்தில், யூரியா உரம் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பேருந்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு யூரியா உரம் கொட்டப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து ஹைபொரஸ்ட் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்த போது, இனந்தெரியாதோரால் பேருந்தின் இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில் பேருந்து இயக்கப்படுவதற்கு முன்பு, அதில் இயந்திர எண்ணெய்யை சோதனை செய்ய முற்பட்ட போதே, யூரியா உரம் இயந்திரத்தில் கொட்டப்பட்டுள்ள விடயம் தொியவந்துள்ளது.

இது தொடர்பில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் அன்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பின்னர் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நுவரெலியா டிப்போவுக்கு பேருந்து இழுத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதன் இயந்திரம் அகற்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.