இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு விசாரணைகளில் ஆறு பொலிஸ்குழுக்கள்

63 0

நாடாளவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  ஹங்வெல்ல பஹத்கம , மீகொட முதுஹெனவத்த பகுதிகளிலேயே இந்த துப்பாக்கிப் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவரால் நேற்று இரவு துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபரின் வலது காலில் காயம் ஏற்பட்டதுடன் அவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த நபர் பாதாள உலக்குழுவின் உறுப்பினரென அடையாளம் காணப்பட்டுள்ள ”பஸ் லலித்” என அழைக்கப்படும் லலித் கன்னங்கரகே தரப்பைச்சேர்ந்த ”கந்த உட இரேஷ்” என்பவரின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 12 ஆம் திகதி மீகொட பிரதேசத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ  கொல்லப்பட்டமை தொடர்பில் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவவின் உறவினர்களான திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ”கங்கன” மற்றும் ”ஹந்தபான்கொட ஹந்தயா”’ ஆகியோரினால் இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

”ஹந்தபான்கொட ஹந்தயாவின்” தரப்பினரால் ”லலித் கன்னங்கர” தரப்பினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இதற்கமைய கன்னங்கரவின் தர்பினர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி பொலிஸ் பாதுகாப்பைப் பெற்று கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே மீகொட முதுஹெனவத்த பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிப்பிரயோகம் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியை பயன்படுத்தி வானத்தை நோக்கி இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.