மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

57 0

முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் வலுசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஆரம்பித்துள்ள 20 மெகாவொட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவொட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை  தற்காலிகமாக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

வலுசக்தி என்பது ஒரு பிரதேசத்திற்கு மாத்திரமன்றி நாட்டின் தேசிய வளம் என்றும், மின்சாரப் பிரச்சினை உள்நாட்டு மின் கட்டணத்துடன் மாத்திரமன்றி நாட்டின் உற்பத்திச் செலவு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்களினால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் உட்பட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளதாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் அனைத்து வளங்களும் இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்றும், வலுசக்தி என்பது ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மாறாக முழு நாட்டு மக்களினதும் உரிமை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இழக்கச் செய்யும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு சலுகை வழங்க அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும்  உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மன்னார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த மதத் தலைவர்கள் உட்பட மக்கள், இல்மனைட் திட்டமும் காற்றாலை திட்டமும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கையையும் பாதிப்பதாக இதன்போது தெரிவித்தனர்.