இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2024 அறிக்கையை வெளியிடும் போது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலில் இருக்கும்போது கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்தல், பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் வைத்து 7 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

