உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனி சான்சலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஜேர்மனி சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அலாஸ்கா மாநாட்டிற்கு முன்பாக, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் தலைவர்களின் குரலைக் கேட்டும் முயற்சியாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தலைநகர் பெர்லினில் புதன்கிழமை நடைபெற உள்ள இந்த சந்திப்பில், சான்சலர் மெர்ஸ் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் தங்களது நிலைப்பாடு, போர் நிறுத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகள் குறித்து ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

