சுப்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனால் இதன் உண்மைத்தன்மை என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்க தவறிய அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்று கேட்கிறோமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சுபம்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்துக்கு முன்வைத்த அறிவிப்பு பிழையென அமைச்சர் வசந்த சமரசிங்க மறுநாள் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தினால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பிரதமர் ஹரினி, பாராளுமன்றத்தில் இதுதொடர்பில் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே பதிலளித்திருந்தார். அதுவும் நிதி அமைச்சின் செயலாளரினால் தயாரித்து வழங்கப்பட்ட பதிலையே ஜனாதிபதிக்கு பதிலாக அவர் முன்வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் இரண்டாவது பிரஜையான பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த அந்த விடயத்தை மறுநாள் அமைச்சர் வசந்த சமரசிங்க அதனை பிழையென தெரிவித்தமை பாரிய பிரச்சினையாகும்.
பிரதமரினால் முன்வைக்கப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருந்திருந்தால், அதுதொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி, அதனை பாராளுமன்றத்தில் சரி செய்திருக்கலாம். அவ்வாறு இல்லாமல் அமைச்சர் வசந்த சமரசிங்க, இவ்வாறு வெளிப்படையாக பிரதமரின் கூற்றை பிழையென தெரிவித்ததன் மூலம் அவர் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப்பாெறுப்பை மீறிய அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம். எம்மை பொறுத்தவரை அமைச்சர் பதவி விலகவேண்டும்.
அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் அரசாங்கத்துக்குள் மூன்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயற்கை செய்மதிக்கு அரசாங்கத்தில் இருந்து ஒரு சதமேனும் செலவிடப்படவில்லை என பிரதமர் பாராளுமன்றத்துக்கு தெரித்தார்.
ஆனால் அரசாங்கத்தின் பணம் செலவிடப்படுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி என்ற பெயரில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தலங்களில் செய்மதி ஒன்று இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவ்வாறு அரசாங்கத்துக்குள் இருந்து பரஸ்பர விரோதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதால் இதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

