பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய துறைகளில் அவர் முக்கிய பதவியை வகிப்பதானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாகவே இருக்கும். எந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையை சாட்சியை மறைத்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுடன் அவர் பாதுகாப்புத்துறையில் உயர் பதவியை வகிப்பது எந்த வகையிலும் பொறுத்தமற்றது. சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய துறைகளில் அவர் முக்கிய பதவியை வகிப்பதானது விசாரணைகளுக்கு தடையாகவே இருக்கும்.
இது தொடர்பில் கத்தோலிக்க மக்களும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றனர். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை அவரால் இன்று வரை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எந்தக் காரணத்துக்காகவும் தாமதப்படுத்தப்படக் கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனை விடுத்து காணாமல் போன செய்மதியை மீண்டும் காணாமல் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த செய்மதியை அடிப்படையாகக் கொண்டு ராஜபக்ஷர்கள் ஊழல், மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது தொடர்பில் பிரதமரும் அமைச்சரொருவர் முரண்பட்ட கருத்துக்களைக் கூறுகின்றனர். எந்த வகையிலும் இருவர் கூறிய கருத்துக்களும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
யாரோ ஒருவரது கருத்து தவறாகும். அது யாருடைய கருத்து என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இது விளையாட்டல்ல. எனவே இந்த விவகாரம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

