இஸ்ரேலின் சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால், அரசாங்கம் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளித்தார் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மெளலவி மிப்லால் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த சபாத் இல்லத்துக்கான சட்டரீதியான அனுமதி தொடர்பிலும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினோம். சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இருப்பதனையும் அதன் தவிசாளராக தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இருப்பதையும் அமைச்சருக்கு தெரிவித்ததுடன் குறித்த சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொடர்பிலும் இந்த பள்ளிவாசல் வளாகத்தில் பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் அமைந்துள்ள விடயம் தொடர்பிலும் எடுத்துரைத்தோம்.
அந்த பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வடிவமைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதமாக அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இவற்றை கேட்டறிந்த அமைச்சர் விஜித ஹேரத், சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால், மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் .
மேலும் சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடத்தை அகற்ற உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார் என்றார்.

