சகல மக்களினதும் வாழ்வை மேம்படுத்க்கூடிய வகையில் இலங்கையை அபிவிருத்தி செய்யவேண்டுமானால், ஆட்சிமுறையிலும் அரசியலிலும் பெண்கள் பெருமளவுக்கு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க வேண்டியது அவசியமானதாகும் என்று போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தாபகரும் தலைவியுமான விசாகா தர்மதாச அண்மையில் பாராளுமன்ற அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது கூறினார்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி 47 பெண்கள் அடங்கிய குழுவொன்று விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றுக்காக பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு விஜயம் செய்தனர்.
பெருமளவுக்கு பல்வகைமை கொண்டதும் சகல தரப்புகளையும் முறையாக பிரதிநிதித்துவம் செய்யக்கூடியதுமான தலைமைத்துவமும் முன்முயற்சிகளும் இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு நேரத்தில் பெண்கள் குழுவின் பாராளுமன்ற விஜயம் இடம் பெற்றிருப்பது மிகவும் தருணப் பொருத்தமானதாகும் என்று தர்மதாச கூறினார்.
சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பு ( பவ்ரல்), போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம், தொடர்பாடல் பயிற்சிக்கான நிலையம், இலங்கையிலும் மாலைதீவிலும் ஜனநாயகமும் பெண்களும் என்ற அமைப்புகளுடன் கூட்டுச்சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் தேசிய சமாதானப் பேரவை நடைமுறைப்படுத்தும் ” தேர்தல்களுக்கும் ஜனநாயகத்துக்குமான செயலூக்கம் மிகுந்த குடிமக்கள் ” ( Active Citizens for Elections and Democracy ) என்ற திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த பாராளுமன்ற விஜயம் அமைந்தது.
இந்த முன்முயற்சி பெண்களுக்கு அவர்களது அரசியல் பயணத்தில் உற்சாத்தையும் பாராளுமன்றச் செயன்முகைள் பற்றிய நேரடி அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான அரிதான வாய்ப்பையும் ஆட்சிமுறைமைகள் பற்றிய ஆழமான விளக்கப்பாட்டையும் கொடுப்பதைை நோக்கமாகக் கொண்டதாகும்.
” அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தின் வகிபாகமும் ” என்ற தொனிப்பொருளில் பிரதம உரையை பாராளுமன்ற அலுவலர்களின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன நிகழ்த்தினார். அவரது உரை வரலாற்றுப் பின்புலத்தையும் சமகால ஆய்வையும் விளக்கியதாக அமைந்தது.
அதையடுத்து பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் விவகார பதில் பணிப்பாளருமான ஜெயலத் பெரேரா பாராளுமன்றத்தின் குழு முறைமைகள் ( Committee System of Parliament ) பற்றி விளக்கமளித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக பெண்களும் கொள்கைகளிலும் மேற்பார்வையிலும் சபை விவாதங்களுக்கு அப்பால் சட்டவாக்கத்திலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய மார்க்கங்கள் குறித்து தனது உரையில் அவர் முக்கிய கவனம் செலுத்தி விளக்கமளித்தார்.
அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் உத்வேம் குறித்து ஆழமான திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். பாராளுமன்றத்துக்கான விஜயம் ஒரு அடையாளபூர்வமான நடவடிக்கை என்பதற்கும் மேலாக பயனுறுதியுடையதாகவும் தங்களது ஆற்றல்களுக்கும் நம்பிக்கைக்கும் நடைமுறையில் பயன்தரத்தக்க ஊக்கம் தருவதாகவும் அமைந்திருந்ததாக அவர்கள் கூறினர்.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் பென் பேரின்பநாயகம் ஆகியோரும் பேரவையினதும் உறுப்பினர்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தினதும் உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களது பங்கேற்பு நாடுபூராவும் சகல தரப்புகளையும் அரவணைக்கும் வகையிலான அரசியல் பங்கேற்புக்கும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் பெரும் ஆதரவைத் தருவதாக அமைந்தது.
இந்த நிகழ்வு பெண்கள் கூட்டாகச் செயற்பட்டு முன்னோக்கிச் செல்வதற்கும் செயல்நோக்கத்தோடும் புத்துணர்ச்சியுடனும் அரசியல் அரங்கில் செயற்படுவதற்கும் பெருமளவுக்கு ஊக்கம் தரும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

