நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரமளித்துள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு பேரவை நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. நாட்டின் பொலிஸ் மாஅதிபர் வறிமாக்கப்பட்டுள்ளமை மற்றும் பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பரிந்துரை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது பேரவையின் சகல உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 2025.08.05 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் 177 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதை சபாநாயகர் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார்.
இதற்கமைய நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பின் 41 (ஆ) (1) மற்றும் 61 (5) (அ) ஆகிய தத்துவங்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரையை முன்வைத்தார்.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை தொடர்பில் ஆராய்வதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.இதன்போது ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு பேரவையின் சகல உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து ஏகமனதாக அங்கீகாரமளிக்கப்பட்டது.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.இதனைத் தொடர்ந்து பொலிஸ் மாஅதிபர் பதவி வறிதான நிலையில் நியமனம் வழங்குவது இழுபறி நிலையில் காணப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2024 செப்டெம்பர் மாதம் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ் மாஅதிபராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

