கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோஷமிடுவது சர்வசாதாரணம்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன் கச்சதீவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
வட பகுதிக்கு அல்லது முன்னர் வடக்கில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பைக் கொடுப்பதற்கு தீவுகள் முக்கியமானதொரு காரணமாகும். மன்னார் துவங்கி காரைதீவு (காரைநகர்), வரையுள்ள இரணைதீவு, பாலைதீவு, நெடுந்தீவு, கச்சதீவு, புங்குடுதீவு, கற்கடதீவு, எழுவைதீவு, நயினாதீவு. மண்டைதீவு, ஆகியவை இவை. இவற்றுள் மன்னார், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை தரைவழிப்பாதையால் இலங்கைப்பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் எல்லாத்தீவுகளிலும் மக்கள் வசிப்பதில்லை. குறிப்பாக நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கச்சதீவில் மக்கள் வசிப்பத்தில்லை. வருடத்தில் ஒரு முறை மட்டும் இடம் பெறும் கத்தோலிக்க மக்களின் புனித அந்தோனியார் திருநாளுக்கு மட்டும் மக்கள் இலங்கையின் குறிப்பாக வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போவார்கள்.
வடக்கில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மத சகோதரர்களும் கணிசமானளவு தொகையினர் இங்கு வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் திருநாட் காலங்களில் மக்கள் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் முக்கிய ஏற்பாடுகளுக்கு இலங்கைக் கடற்படையினர் பொறுப்பாயிருப்பார்கள்.
கச்சதீவுத் திருநாளுக்கு சில வாரங்குளுக்கு முன் யாழ்ப்பாணச் செயலகத்தில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத்தரப்பினர் யாழ் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் கூடி திருநாளுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவது வழக்கம்.
திருநாள் இல்லாத மற்ற நாட்களில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் கடற்தொழில் செய்பவர்கள் சற்று ஓய்வெடுக்க அல்லது வலைகளைக் காயப்போட இங்கு வந்து போவார்கள். இந்தியக் கடற்தொழிலாளர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து போவதாலும் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தோனியார் கோயிலுக்கு இவர்களும் வந்து வழிபட்டுச்செல்வார்கள்.
நேர்த்திக்கடன் போன்ற கடன்கள் செய்வதற்கும் சில சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் வழங்குவதற்கும் வருவார்கள். இந்தப் பின்ணனியிலும் கணிசமானளவு இந்தியக் கடற்தொழிலாளர்கள் வருவதாலும் கச்சதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்ற ஒரு மயக்கம் உருவானது
ஆயினும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே கச்சதீவில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்றிருந்தது. இவ்வாலயம் யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவுப் பங்கின் கீழ் இருந்தது. நெடுந்தீவுப் பங்கில் உள்ள பங்குத் தந்தைதான் இவ்வாலயத்திற்கு நேரடிப் பொறுப்பாயிருந்து வந்துள்ளார்.
கச்சதீவு திருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுப் பக்கத்திலிருந்து பங்குத்தந்தையின் பணிப்புரையில் கச்சதீவு மூப்பர்’ என்றழைக்கப்பட்ட (மூப்பர் அல்லது கணக்குப்பிள்ளை என்னும் கத்தோலிக்க ஆலய நிர்வாக முறை 16ம் நூற்றாண்டில் புனித சவேரியார் காலத்திலிருந்து ஒரு ஆலயத்தில் குரு நிரந்தரமாத் தங்குவதில்லை யென்றால் அவ்விடங்களில் ஆலயப்பராமரிப்பு, மக்களின் ஆன்மீக நலன் சம்பந்தமான விடயங்களுக்கு இந்த மூப்பரே பொறுப்பாயிருப்பார்.
பங்குத்தந்தை வரும் போது இவரே அனைத்துக்கும் பொறுப்பு கூறுபவராக இருப்பார். இப்போது அனேகமான ஆலயங்களில் வதிவிடப்பங்குத்தந்தை இருப்பதால் பெரும்பாலும் இந்த மூப்பர் முறை நடைமுறையில் இல்லை.) அல்லது வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்பவர் யாத்திரிகளது தேவைகளையும் கவனிப்பார். சில உதவியாளர்களுடன் சென்று அங்குள்ள சிற்றாலயம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்வார்.
பங்குத்தந்தையும் சில நாட்களுக்கு முன் சென்று இப்பணிகளை மேற்பார்வை செய்வார். இவ்வாறு செய்த பழைய மூப்பர்களின் வாரிசுகள் இப்போதும் நெடுந்தீவில் உள்ளனர். அண்மைக்காலங்களில் கடற்படையினர் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் பலவற்றை கடற்படையினர் செய்துவருகின்றனர்.
யுத்தகாலத்தில் கச்சதீவு திருநாள் ஒழுங்காக இடம் பெற்றிருக்கவில்லை. இங்கு ஒரு தற்காலிக கடற்படை முகாமும் இருந்தது. யுத்தம் முடிவடைந்தபின் யாத்திரைகள் கிரமாக இந்திய இலங்கை யாத்திரிகாகளுடைய பங்குபற்றுதலுடன் இடம் பெற்று வருகின்றன.
யாழ்மறை மாவட்ட ஆயரின் பணிப்புரையில் நெடுந்தீவுப் பங்குத்தந்தையே வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். யாழ் ஆயரின் அழைப்பின்பேரில் தான் இந்தியாவின் தங்கச்சி மடம் பங்குத்தந்தையும் வேறு சில குருக்களும் துறவிகளும் வருகின்றனர். இந்திய யாத்திரிகளது எண்ணிக்கை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் யாழ் கச்சேரியில் நடக்கும் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது.
இந்திய யாத்திரிகள் கணிசமானளவு வருகின்றமையால் இந்திய குருக்களுக்கும் கூட்டுத்திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கணிசமான பங்கு வழங்கப்படுகின்றது. கச்சதீவுப்பெருநாள் ஏற்பாடுகளும், வழிபாட்டு ஒழுங்கமைப்பும் இலங்கை அரசினதும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் பணிப்புரையிலேயே நடைபெற்றுவருகின்றது.
நிறைவாக கச்சதீவு கடந்த பல தசாப்தங்களாக (யுத்தகாலம் நீங்கலாக) இந்திய இலங்கை யாத்திரிகள் ஏறக்குறைய சரிக்குச்சரி எண்ணிக்கையில் வந்துபோனமையாலும், திருநாள் இல்லாத வருடத்தின் எஞ்சிய நாட்களின் இரு நாட்டுக்கடற்தொழிலாளரும் கச்சதீவுக்குச் சர்வசாதாரணமாக வந்து ஓய்வெடுத்து இங்கிருந்த அந்தோனியார் சிற்றாலயத்தில் வணங்கிச் சென்றதாலும் அரசியல், புவியியல் ரீதியில் கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி குறிப்பாக இந்திய தரப்பில் கேட்கப்பட்டுவந்தது.
இப்பகுதியில் இலங்கைக் கடலில் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதால் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என்று தமிழக அரசியல் தரப்பிலும் இந்திய மத்தி அரசிலும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
உண்மையில் 1974ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் அதில் இந்தியா உரிமை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்தமையாகாது. ஏனெனில் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லை.
இந்த பின்னியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மிளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை அப்போதே யாழ் ஆயராக இருந்த கலாநிதி. ณ. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயரில்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவுப் பங்குப் பதிவேடுகள் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம் யபரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எனவே ய இந்தியப் பிரதமரின் கூற்றாகிய 1974 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதுதான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் தி.மு.க கட்சியும் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளியாக இருந்தது என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
புதிய, 2016ம் ஆண்டு தற்போதைய ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பொறுப்பேற்றபின் பல வருடங்களாக குறிப்பாக போர்க்காலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் ஒரு பல்லாயிரக்கணக்கான யாத்திரிகள் கலந்துகொள்ளும்படியான ஒரு ஆலயம் கட்டவேண்டிய தேவையை உணர்ந்து கடற்படையினரிடம் அனுசரணையைக் கோரியபோது.
அவர்களது அனுசரணையில் ஒரு புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்திய யாத்திரிகர்களும் வருகின்றனர் மற்றும் கடற்தொழிலாளரும் இங்கு மற்ற நாட்களில் வந்து ஓய்வெடுக்கவும் தமது வலைகளைக் காயப்போடவும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து பேணப்படுகின்றது என்றுள்ளது.

