15 ஆம் திகதி முழு ஹர்த்தாலுக்கு அழைப்பு – மனோ, ஜீவன் ஆதரவு

62 0

வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதி கோரியும், எதிர்வரும் 15 ஆம் திகதி முழு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இந்த ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் குறித்து நீதியான விசாரணை அவசியமென அவர் வலியுறுத்தினார். 

 

வடக்கு-கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மக்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதற்கு இந்த மரணம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனைக் கண்டித்து, வடக்கு மற்றும் கிழக்கில் முழுமையான ஹர்த்தாலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதற்கு ஆதரவாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத்தீவு சம்பவத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு, இலங்கையராகவும், மலையகத் தமிழராகவும் தனது முழு ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறும் இந்த ஹர்த்தாலுக்கு தனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும், யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாகியும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுவது வருத்தமளிப்பதாகவும், இவற்றை ஏற்க முடியாதெனவும் அவர் வலியுறுத்தினார்.

 

அதேவேளை, முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாம் சம்பவத்தைக் கண்டித்து, வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆதரவு வழங்குவதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

 

மேலும், வடக்கு – கிழக்கில் உள்ள மேலதிக இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரினார்.

 

இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ வீரர்களின் மனங்களில் இனவாதம் உள்ளதாகவும், அவர்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து, குளம் வெட்டுதல், வீதி அமைத்தல், வீடு கட்டுதல், விருந்தகங்கள் நடத்துதல், தோட்டம் செய்தல், காய்கறி சந்தை நடத்துதல் போன்ற அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 

முன்னைய அரசாங்கங்கள் செய்தவற்றை மாற்றி, மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் செயல்களைத் தொடர்ந்தால் அதனை எதிர்ப்போமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.