மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றி மக்களை ஏமாற்றுகிறது!

102 0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களுக்கும் உண்டு.சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் வகையில் தான் செயற்பட்டன.

இவ்வாறான பின்னணியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.தேர்தல் முறைமை காரணமாக மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகாலமாக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் இதுவரையில் உரிய தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை.

மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிராக நாட்டில் கடுமையான பிரச்சாரங்களை மக்கள் விடுதலை முன்னணி தோற்றுவித்து மாகாண சபை முறைமை பற்றி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

இவ்வாறான பின்னணியில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.இருப்பினும் இதுவரையான காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.இதனை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும்.ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.