பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை தற்காலிகமாகவாது பதவிநீக்கம் செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சுயாதீன விசாரணைக்கு இடமளித்து நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி இருக்கிறது. அதனை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடித்து சட்டத்துக்கு முமன் நிறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாகவும் தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியாகும். இதனை நாங்களும் தெரிவித்தோம். தற்போதுள்ள அரசாங்கமும் தெரிவித்திருந்தது. என்றாலும் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கைவைத்து ஆட்சியில் அமர்த்தினார்கள். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நெருங்கும் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான பாரிய விடயங்கள் எதனையும் இதுவரை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதியாக இருந்த அருண ஜயசேகர, தற்போது இந்த அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.இவர் இந்த தாக்குதல் தொடர்பில் பிரதான சாட்சியாளர். அப்படியான ஒருவரை பொறுப்புவாய்ந்த பதவியில் வைத்துக்கொண்டு, மேற்கொள்ளப்படும் விசாரணையில் சுயாதீனத்தன்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
அதனால் பாதுகாப்பு அருண ஜயசேகர பிரதி பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலகி, அரசாங்கத்தின் கெளரவத்தை பாதுகாத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைை நடவடிக்கைகளின் சுயாதீனத்தை பாதுகாப்பார் என நாங்கள் நம்புகிறோம்.அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் தொடர்ந்தும் அவரை இந்த பதவியில் வைத்துக்கொண்டிருக்குமானால், அது அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்படும் பாரிய குற்றச்சாட்டாக அமையும்.குறிப்பாக இந்த தாக்குதல் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இதுவரை காலமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அருண ஜயசேகரவா என்ற கேள்வி எழுகிறது.
இதுதொடர்பாக அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல தடவைகள் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் தெரிவித்திருந்தபோதும் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தது. அதனாலே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானித்தோம்.
அதேநேரம் அருண ஜயசேகரர இந்த பதவியில் இருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைக்கு இடையூறு என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரும் தெரிவித்திருந்தார். சந்தேகத்துக்குரிய நபரை விசாரணைகளின் மேல் இடத்தில் வைத்தால், அந்த நடவடிக்கை இடம்பெறுவதில்லை என்பது சாதாரண நபருக்கும் புரிகிறது.
எனவே தற்காலிகமாகவேனும் அருண ஜயசேகரவை பிரதி பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, சாதாரண விசாரணைக்கு இடமளித்து, நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு இருக்கிறது. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள எங்களுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லைை. என்றாலும் இதன் மூலம் நியாயமான காரணங்களை வெளிப்படுத்த இடம் கிடைக்கிறது. அதேநேரம் இது அரசியல் பிரச்சினையல்ல. கட்சி அடிப்படையில் தாக்குதலில் மரணிக்கவில்லை. அதனால் எமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்ற, பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கட்சி பேதமில்லாமல் இதற்கு ஆதரவளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

