யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன.
இதனை அவதானித்த இராணுவத்தினர், தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனம் மற்றும் மருதங்கேணி இராணுவ முகாமிலிருந்து 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விஷமிகளால் வைக்கப்பட்ட தீ வேகமாகப் பரவியதால், அருகில் இருந்த ஏனைய பனை மரங்களும் தீக்கிரையாகின. சுமார் இரண்டு மணிநேர கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது பனம் பழ சீசன் என்பதால், பனைகளை நம்பி வாழும் மக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


