லிந்துலை பெயார்பீல்ட் தோட்ட படிக்கட்டுக்களை செப்பனிடுமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

47 0

லிந்துலை பெயார்பீல்ட் தோட்ட படிக்கட்டுக்களை செப்பனிடுமாறு இன்று (8) முற்பகல் 11 மணியளவில் லிந்துலை நாகசேனை பிரதான வீதியில் 80க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லிந்துலை பெயார்பீல்ட் தோட்ட படிக்கட்டுக்களானது 2021ஆம் ஆண்டு லிந்துலை – டயகம வீதி அபிவிருத்திப்  பணிகளுக்காக வீதி அதிகாரசபையால் அகற்றப்பட்டது. 3 வருடங்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட படிக்கட்டுக்களும் மண்சரிவு அபாயம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

அதனை  நிரந்தரமாக செப்பனிட வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்வராமை  மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கோரி, இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இத்தோட்டத்துக்குச் செல்லும் நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறாகியுள்ளது. எனவே, அதனையும் செய்து தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு குறுக்கு வீதியில் பாதுகாப்பாற்ற பாலம் ஒன்று காணப்படுவதால்  பாலத்தை கடக்கும் போது பலர் விழுந்து ஆபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இத்தோட்ட மக்களின் கோரிக்கையாகும்.