தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பளியுங்கள்!

56 0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக  வலியுறுத்துகிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நீதியமைச்சரிடம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமதம்பி சிவகுமார்,விக்னேஸ்வரநாதன்  பார்த்திபன்,கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார்,ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 14 முதல்  30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குடும்பத்தை கருத்திற்கொள்ளுங்கள், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலம்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக  வலியுறுத்துகிறேன் என்றார்.