அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (6) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நிறுவப்பட்டது. இந்த சபை இறுதியாக 2018 ஏப்ரல் 5ஆம் திகதி கூடியது.
அனர்த்த முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட பங்கை முறையாகக் கண்காணித்தல், நாட்டில் அனர்த்த அபாயத்தைக் குறைத்தல் மற்றும் தேவையான கொள்கை முடிவுகளை எடுத்தல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு இந்த சபையின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த முகாமைத்துவச் சபை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ மையத்தை ஒருங்கிணைக்கவும் வசதிகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கிறது. இந்த அமர்வில் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் தேசிய அவசரகால செயல்பாட்டுத் திட்டம் ஆகியவை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இலங்கையில் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய போக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளுக்கான மைய செயல்பாட்டுடன் கூடிய ஒற்றை அமைப்பின் தேவை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.
தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு அனர்த்த முகாமைத்துவம் செயற்திறனுள்ளதாக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தற்போதைய சட்டத்தை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று குழு முடிவு செய்தது.
அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

