பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமா?

39 0

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் சுயாதீன இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் ஆலோசனையை கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழு, பிறிதொரு அமைச்சின் ஆலோசனை கோரும் போது அங்கு சுயாதீனத்தன்மை எவ்வாறு பேணப்படும் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும்.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிதான் நிதியமைச்சின் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். இவர் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுவார். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்க முடியுமா என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சபை சட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் தீயிட்டு எரிப்பதாக தேசிய மக்கள் சக்கி குறிப்பிட்டது.ஆனால் தற்போது அந்த சட்டத்தின் முகப்பு உறையை மாத்திரம் மாற்றி அந்த உள்ளடக்கத்துடன் இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கை மின்சார சபையை 12 கூறுகளாக பிரிப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த சட்டத்தில் அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் இந்த புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையில் மின்சார கட்டமைப்பு பாரிய பின்னடைவை எதிர்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையான பொறுப்புக்கூற வேண்டும்.2005 -2015 வரையான காலப்பகுதியில் முழு நாட்டுக்கும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான இயலுமை காணப்படவில்லை. கடந்த அரசாங்கங்கள் சம்பூர் அனல் மின் திட்டம், நுரைச்சோலை மின்திட்டம் உள்ளிட்ட பலதிட்டங்களை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணி தான் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இன்று மின்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தில் சுயாதீன இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் ஆலோசனையை கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழு, பிறிதொரு அமைச்சின் ஆலோசனையை கோரும் போது அங்கு சுயாதீனத்தன்மை எவ்வாறு பேணப்படும் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும்.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிதான் நிதியமைச்சின் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். இவர் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுவார். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்க முடியுமா என கேள்வியெழுப்பினார்.