பிமல் ரத்நாயக்கவிடம் விளக்கம் கோருங்கள் ; கத்தோலிக்க சபைக்கு விமல் வீரவன்ச

59 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது, அந்த ஆராதனைகளில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவற்றில் பங்கேற்றிருக்கவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையே தானும் தெரிவித்தாகவும், எனவே கத்தோலிக்க சபை விளக்கம் கோருவதாயின் அவரிடமே கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் கூறியதையே நானும் கூறினேன். அதற்கு அப்பால் எந்தவொரு கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எனவே நான் கூறியது தவறென்றால் பிமல் ரத்நாயக்க கூறியது தவறாக இருக்க வேண்டும். எனவே அவர் கூறிய கருத்துக்கள் உண்மையானவையா பொய்யானவையா என்பதை ஆராய வேண்டும். அவர் தெரிவித்த கருத்தை நான் கூறியதி;ல் என்ன தவறு?

அவ்வாறெனில் அவர் கூறிய விடயங்களை பாராளுமன்றத்துக்கு வெளியில் கூறுமாறு பிமல் ரத்நாயக்கவுக்கு கத்தோலிக்க சபை சவால் விடுக்க வேண்டும். அவர் தெரிவித்த விடயங்கள் உண்மையானவை எனில் பாராளுமன்றத்துக்கு வெளியில் எவ்வித அச்சமும் இன்றி அவற்றை மீண்டும் கூற முடியுமல்லவா? கத்தோலிக்க சபைக்கும் நேரடியாக அவரிடம் விளக்கத்தைக் கோர முடியும்.

அதனை விடுத்து என்னை சுற்றி வளைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முதலாவதாக கருத்து கூறிய பிமல் ரத்நாயக்கவை விடுத்து என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான காரணம் என்ன? அது நியாயமல்ல. அரசாங்கத்தின் மீது அனைத்து பக்கங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சீர்குலைந்துள்ளன. பொருளாதார சுமை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கிறது.

விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்தவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி இளைஞர்களும் கைவிடப்பட்டுள்ளனர். அரச துறைகளில் பெரும்பாலானவை ஜே.வி.பி. மயப்படுத்தப்பட்டுள்ளன. தனி கட்சியின் ஆட்சியொன்றை பலவந்தமாகவேனும் முன்னெடுக்க வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் கனவாகும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்துக்குச் சென்று டில்வின் சில்வா இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சகல அரசியல் சக்திகளும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.