புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிறன்று : மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை

55 0

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. பரீட்சைக்காக சிங்கள மொழி மூலம் 231,638 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய இம்முறை 307,959 மாணவர்கள் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கள் அனைத்தும் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புக்கள், விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள முடியாது. இவை தவிர மாணவர்களை ஒன்று கூட்டி ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பரீட்சாத்திகள் 8.30க்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்றுவிட வேண்டும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு பொது போக்குவரத்து சேவை நிறுவனங்களிடம் கேட்டு கொள்கின்றோம். மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.