“உங்கள் கரிசனைகளை மனித உரிமை பேரவைக்கான எனது அறிக்கை பிரதிபலிக்கும்”-ஐநா மனித உரிமை ஆணையாளர்

85 0

தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும்,மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை எழுதியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும்  மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என  தெரிவித்துள்ளார்.

என்னுடைய இந்த விஜயங்கள் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான வலுவான நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டனர் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் முழுமையான சர்வதே தராதரங்களை எட்டுவதற்கு தவறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.