சீன தூதரகத்தின் அதிகாரபூர்வ கடிதமென சமூக ஊடகங்களில் பரவுவது போலியானது – சீனதூதரகம்

48 0

சீன தயாரிப்பு இலத்திரனியல் வாகனம் தொடர்பில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து சீன தூதரகத்தால் கவலை வெளியிடப்பட்டதாக தெரிவித்து கடிதமொன்று  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கான சீன தூதுவரின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் வெளியாகியுள்ளது.

குறித்த கடிதத்தில்,

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தினால் ஆகஸ்ட் முதலாம் 2025 அன்று திகதியிடப்பட்டு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து பிரதான ஆசிரியர்கள், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு பெயரிடப்பட்டு ஊடக அமைச்சர் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், BYD Auto Co., Ltd., என்ற உலகளாவிய சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் சுங்க செயற்பாடுகள் குறித்து இலங்கையின் ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்து தூதரகம் தனது கடுமையான கவலையை வெளிப்படுத்துகிறது என்றும் ஊடகங்களில் வெளியான பல செய்திக் கட்டுரைகள் தொழில்நுட்ப பிழைகள், சுங்க முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்த ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைக் கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கடிதம் தொடர்பிலான உண்மைத்தன்மையை அறிய வீரகேசரி இணையத்தள பிரிவு சீன தூதரகத்தை தொடர்புகொண்டு வினவிய போது, அதனை முற்றாக மறுத்துள்ளதுடன் குறித்த கடிதம் போலியானது என்றும் தெரிவித்துள்ளது.