பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரவுள்ள நீதியை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர நீங்கள் தயார் இல்லை. அந்த தெளிவான மனநிலை உங்களிடம் இல்லை.தேசபந்து தென்னகோனுக்கு மட்டுமல்ல. இங்கு நடந்த தமிழினப் படுகொலைகள். கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.அதில் நான் சாட்சியமளிக்க தயார் என மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்சவை தயார்படுத்துங்கள். உண்மைகள் வெளியே வரட்டும். செம்மணி குறித்து சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தால் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையானது மிகப்பெரும் அநீதிக்கு எதிரானது. மக்கள் பட்டதுயரங்கள்இஅனுபவித்த சித்திரவதைகள், இங்கு நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரானது என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
அவருடைய பதவி நீக்கம் என்பதற்கு அரசு கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவும் தயார். காரணம் நாமும் இதே துன்பங்களை, சித்திரவதைகளை, சந்தித்த ஒரு இனம் என்ற வகையிலும் தொடர்ச்சியாக இந்த நாட்டிலே பல்வேறுபட்ட பொலிஸ் அராஜகங்களுக்கும் இராணுவ அராஜகங்களுக்கும் முகம் கொடுத்து இன்றுவரை வாழ்கின்ற இனம் என்ற அடிப்படையில் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கின்றோம்.காரணம் நீதி என்பது அனைவருக்கும் சமமானது.
சட்டத்துக்கு முன்னாள் அனைவரும் சமம் என்றால் இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள்,பறங்கியர் என்ற எல்லா இனம் சார்ந்தவர்களும் நீதியின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும் நியாயாதிக்கம் பேணப்பட வேண்டும் . நாட்டினுடைய சட்ட ஆட்சி நேர்மையானதாக இருக்க வேண்டும். அந்த சட்ட ஆட்சி பாராளுமன்ற ஆட்சியின் ஊடாக ஒரு தீர்ப்பை மக்களுக்கு சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.அந்த வகையில் தேசபந்து தென்னக்கோன் நடந்து கொண்ட முறைக்கும் அவரின் சித்திரவதை கூடங்களுக்கும் அவர் இந்த நாட்டில் செய்த அநியாயங்களுக்கும் தீர்ப்பு கிடைக்க வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
இந்த நாட்டில் அதிகளவு துன்ப,துயரங்களை அனுபவித்தவர்கள் தமிழர்கள். 1998 ஆம் ஆண்டு சி.எஸ்.யு .என்னை வவுனியாவில் கைது செய்தது. 26 வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு 26 நாட்களின் பின்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று என்னை விடுதலை செய்தார்கள். 26 நாட்கள் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினரால் மிகக்கொடூரமாக் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
என்னைப்போல் இன்னும் எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.பயங்கரவாத தடைச்சட்டம் வந்த பின்னர்தான் நாம் எமது மக்களை பெருந்தொகையில் இழந்தோம்.60000க்கும் மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். பலரின் மரணங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. இதனைதமது கையில் வைத்திருந்த பொலிஸார் செய்த அநியாயங்கள் பலவுண்டு. தென்னகோன் மட்டுமல்ல இந்த நாட்டில் இருந்த பல பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸார் மிக மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு பல வரலாறுகள் உண்டு . பல படுகொலைகளுக்கு காரணம் உண்டு .
செம்மணியில் நேற்று வரைக்கும் 155 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. 1 ஆம் திகதி நான் செம்மணியை சென்று பார்வையிட்டேன்.கடந்த திங்கட்கிழமை ஸ்கான்செய்யும் இயந்திரம் மூலம் சித்துப்பாத்தி மயானமும் அதனை அண்டிய பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இங்கு இன்னும் பல எலும்புக்கூட்டு வயல்கள் இருப்பதாக தகவல்கள் சொல்லியுள்ளன.
அவ்வாறானால் இவ்வாறு தமிழர்களுடைய எலும்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிவரக்காரணமாக உள்ள கொலையாளிகள் யார் ?இக்கொலைகளை யார் செய்தார்கள்? தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீங்கள் கொண்டுவரவுள்ள நீதியை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர நீங்கள் தயார் இல்லை. அந்த தெளிவான மனநிலை உங்களிடம் இல்லை. இதில் ஒரு சர்வதேச மேற்பார்வையை கொண்டுவாருங்கள் என்று கேட்டால் கூட அரசு அதில் தெளிவில்லாதநிலையில் உள்ளது
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரகேசரி பத்திரிகையை சபா பீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.அதில் ”சர்வதேச விசாரணைக்கு சாட்ச்சியமளிக்கத் தயார்”கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அறிவித்துள்ளார். அவருடைய மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் என்ற செய்தி வந்துள்ளது. அவருடைய மனைவி ஜனாதிபதிக்குஇ பிரதமருக்கு, நீதி அமைச்சருக்கு சிங்களத்தில் எழுதிய கிட்டத் தட்ட 6 பக்கங்களைக் கொண்ட கடிதத்தையும் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் குறிப்பிடுகின்றார். இங்கே நடந்த மிக மோசமான மனிதப்படுகொலைகளுக்கு சாட்சியமளிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு வரத் தயார் என்கின்றார்.
சோமரத்ன ராஜபக்ச சட்டவிரோதமாக தண்டிக்கப்படுகின்றார். ஆகவே செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதில் நான் சாட்சியமளிக்க தயார் என எனது கணவர் தெரிவித்துள்ளார் என திருமதி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். எனவே தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல. இங்கு நடந்த தமிழினப் படுகொலைகள் .கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும். ஆகவே இந்த செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்சவை நீங்கள் சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்துங்கள். உண்மைகள் வெளியே வரட்டும்.அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.

