பாதாள உலகக் குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இயல்பாக துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. அரச அதிகாரிகளையும், விவசாயிகளையும் விமர்சிக்கும் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகக் குறைந்தது பாராளுமன்றத்திலேனும் இது தொடர்பில் பேசுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பொலிஸ் தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. பாதாள உலகக் குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இயல்பாக துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.
பாதாள உலகக் குழுக்களால் இவ்வாண்டுக்குள் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய ஆண்டுகளுடுடன் ஒப்பிடுகையில் இது ஆபாயம் மிக்க வளர்ச்சியாகும்.
பொது மக்கள் மத்தியில் மிகச் சாதாரணமாக குற்றச் செயல்களும் கொலைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதில்லை. எவராவது எந்த சந்தர்ப்பத்திலாவது பொலிஸார் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்? இது தொடர்பில் எவரும் வாய் திறப்பதே இல்லை.
கடந்த அரசாங்களின் ஆட்சியில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருப்பார்கள். பொலிஸ்மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் போன்றோர் பதவி விலகி அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார்கள். ஆனால் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ஜே.வி.பி.யின் பழைய தலைவர்கள் அல்லவா தற்போது ஆட்சியிலிருக்கின்றனர்?
பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அதனால் தான் அவர்கள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் லால் காந்த அரச துறையினர், விவசாயிகள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருகள் கடத்தல்காரர்கள் தொடர்பிலோ, பாதாள உலகக் குழுக்கள் தொடர்பிலோ பேசவில்லை.
லால் காந்த மாத்திரமல்ல, அரசாங்கத்திலுள்ள எவரும் இவை தொடர்பில் பேசுவதில்லை. மாறாக பொலிஸாரின் இயலாமையை மறைத்து அவர்களை பாதுகாப்பவர்களாவே செயற்படுகின்றனர்.
இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் யோசனையை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும். தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு முன்னதாகவே நாம் தெரிவித்து விட்டோம்.
எனவே அவரை பதவி நீக்கும் யோசனை நிச்சயம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். ஆனால் தேசபந்துவரைப் போன்று மேலும் பலர் இலங்கை பொலிஸில் உள்ளனர். தேசபந்து விவகாரம் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும். தேசபந்துவைப் போன்று அரசியலுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். மறுபுறம் நேர்மையான அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டும் என்றார்.

