மாகாண சபைத் தேர்தல் சிக்கலுக்கு தீர்வு காண சர்வ கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும்

54 0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணி மாகாணசபை முறைமைக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து இந்த நாட்டில் பாரியதொரு இனகலவரத்தை ஏற்படுத்தியது.

மாகாணசபைத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பிற்பட்ட காலத்தில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். காலவோட்டத்தின் பின்னர் மாகாணசபை முறைமையில் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.

மாகாணசபை விவகாரத்தில் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு தற்போது ஒருமித்ததாக காணப்படுகிறது. ஆகவே தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

மாகாணசபை தேர்தல் தொடர்ந்து இழுபறிநிலையில் உள்ளது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை தயாரித்துள்ளது.இது முற்றிலும் தவறானது என்றார்.