தரமற்ற ஆன்டிபயடிக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள பிணை மனு கோரிக்கை தொடர்பான உத்தரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டுள்ளது.
இந்த பிணை மனு மீதான உத்தரவு இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த உத்தரவு எதிர்வரும் 7 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவங்ஷ அறிவித்தார்.
இலங்கைக்கு தரமற்ற ஆன்டிபயடிக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக பெர்னாண்டோ முதல் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
தான் சுமார் ஒன்றரை வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளதாகவும் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனது பிணை விண்ணப்பங்களை நிராகரித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறுபரிசீலனை செய்து, தன்னை பிணையில் விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

