கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, “Clean Sri Lanka” திட்டத்துடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியில் “தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு – 2025” ஐ நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 2025 நாளை 04 ஆம் திகதி முதல் 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறும்.
இக்கணக்கெடுப்பின் தொடக்க நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில், 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி காலை 08:00 மணிக்கு பானந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.
கணக்கெடுப்பின் நோக்கங்கள்
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பரவலாக உள்ள சுமார் 50,000 மீன்பிடிப் படகுகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம், தொழிலில் தீவிரமாக ஈடுபடும் படகுகளை அடையாளம் காண்பது, பாவனையில் இல்லாத மற்றும் பழுதடைந்த படகுகளை கரையோரத்திலிருந்து அகற்றி “Clean Sri Lanka” திட்டத்திற்கு ஆதரவளிப்பது, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பது மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ஒழுங்குபடுத்துவது போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன.
கணக்கெடுப்புச் செயல்முறை
இந்த கணக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத்தில், வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட OFRP மற்றும் MTRB படகுகளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் அனைத்து பல நாள் மற்றும் இயந்திரமற்ற படகுகளும் கணக்கெடுக்கப்படும்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொரு மீன்பிடித் இறங்குதுறைகளுக்கும் விஜயம் செய்து, படகுகளைப் பரிசோதித்து பிரத்தியேக கணக்கெடுப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவார்கள்.
கணக்கெடுப்புக்குப் பின்னரான நடவடிக்கைகள்
கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், அமைச்சின் நிகழ்நிலை உரிமம் வழங்கும் முறைமையான MSDFAR கட்டமைப்பில் உள்ளடக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு முதல், இயக்க உரிமங்கள் மற்றும் ஏனைய அனைத்து உதவித் திட்டங்களும் இக்கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட படகுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். பாவனைக்குத் தகுதியற்ற மற்றும் உரிமையாளர்கள் இல்லாத பழுதடைந்த படகுகள் சட்டரீதியாக கரையோரத்திலிருந்து அகற்றப்படும்.
இதன் மூலம் சுற்றாடல் மாசடைவதைத் தடுப்பதும், டெங்கு போன்ற நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஆவணப்படுத்துவதற்காக உங்கள் ஊடக நிறுவனத்திற்கும் அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.

