விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

67 0

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

பொலன்னறுவை – ஹபரண வீதியின் 63வது மற்றும் 64வது மைல்கல்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்றவர் லொறியில் சிக்கி படுகாயமடைந்தார்.

பின்னர் அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஜயந்திபுர பகுதியில் வசித்து வந்த 25 வயதான இளம் பெண் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலாத்தோட்ட – நாகொடை வீதியின் எட்டவில பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரே திசையில் முன்னாள் பயணித்த கார் ஒன்றை ஒன்றாக முந்திச் செல்ல முற்பட்ட வேளை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.