அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி என்பது கூட்டு முயற்சியின் வெற்றியாகும்

74 0

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி என்பது கூட்டு முயற்சியின் வெற்றியாகும். எமது சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதுடன், இலங்கையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றி அமைக்க சர்வதேச மட்டத்தில் உறுதிபூண்டுள்ளோம். இலங்கையின் வர்த்தக செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புக்கூறும் வகையிலும் அமையும் என்பது அமெரிக்காவுக்கு உறுதியளிக்கப்பட்டது என நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்றுறையில் தேசிய தொழில்முனைவோருக்கான சந்தை அணுகலை மேம்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கு பரந்தளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமாக உணரப்பட்டுள்ளது. இந்த வரி அமுலாக்கம் தொடர்பில் தொழில் முனைவோருடன் அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளமை நாட்டின் வர்த்தக பொருளாதாரத்தின் முன்னேற்றகரமான போக்கினை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கும், தீர்வு முன்வைப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட அவதானம் செலுத்தி துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமித்தார்.

பிராந்திய சந்தையில் அதன் போட்டி நிலைமையைப் பேணுவதன் மூலம் இலங்கை எவ்வாறு ஏற்றுமதி துறையில் முன்னேற்றமடைய முடியும் என்பதை தீர்மானிப்பது முதன்மை இலக்காக இருந்தது. இலங்கையின் பண்டங்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியாளர்களுக்கான சந்தைப் பங்கை பராமரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பிரதிநிதிகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான இருதரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவே பரஸ்பர தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது அண்மைக்கால பேச்சுவார்த்தையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்த வரி நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு வரி வலைப்பின்னல் குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தொடர்ச்சியான போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கு இலங்கை பிரதிநிதிகளின் பிரதான இலக்காக அமைந்தது. அத்துடன் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டு சந்தை வாய்ப்புக்களை விஸ்தரிப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை பரஸ்பர தீர்வை வரியை மாத்திரம் வரையறுத்ததாக அமையவில்லை. நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்க ஆற்றல் மற்றும் தொழிற்றுறை அம்சங்களை விருத்தி செய்வதை மையமாகக் கொண்டு பரந்த பொருளாதார மூலோபாய திட்டங்களை முன்னிறுத்தியதாக அமைந்தது. இலங்கையின் வர்த்தக செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புக்கூறும் வகையிலும் அமையும் என்பது அமெரிக்காவுக்கு உறுதியளிக்கப்பட்டது.

20 சதவீத தீர்வை வரி வலய நாடுகளின் அடிப்படையில் இலங்கைக்கு விசேட பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் கணிசமான அளவு பாதிப்புக்கள் தொடர்பில் தேசிய தொழில் முயற்சியாளர்களுடன் அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். வர்த்தக அணுகலை விரிவுபடுத்தும் அதேவேளை முக்கியமாக துறைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியாக உள்ளோம்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை இலங்கையின் பொருளாதாரத்துக்கு எவ்வித்திலும் பாதிப்பு ஏற்படாது. அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாதகமான சூழுலை ஏற்படுத்திக் கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி, மூலப்பொருட்கள் மற்றும் மேம்பட்ட இயந்திரங்களின் நிகர இறக்குமதியாளராக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இவை பெரும்பாலும் தொழில்துறை மற்றும் நுகர்வோர் பயன்பாட்டுக்காக பெறப்பட்ட தயாரிப்புக்களாகும்.

அமெரிக்காவுக்காக இலங்கையின் சலுகையானது அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நேரடி ஒப்பந்தங்களில் அல்லாமல், தனியார் விநியோகத்தர்களுடன் நடுநிலையான போட்டி அடிப்படையிலான சந்தை அணுகலை அடிப்படையாக கொண்டுள்ளது.

தைத்த ஆடைத் தொழிற்றுறையில் தேசிய தொழில்முனைவோருக்கான சந்தை அணுகலை மேம்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கு பரந்தளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமாக உணரப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. வரிகளை குறைக்க முடியாது. தற்போதைய நிலையில் தேவையான மாற்றங்கள் குறித்து சகல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். வர்த்தக விவகாரத்தில் பல்தரப்பு கூட்டாளர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் இணக்கமாக செயற்படுகிறோம்.

20 சதவீத பரஸ்பர தீர்வை வரி என்பது கூட்டு முயற்சியின் வெற்றியாகும். எமது சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதுடன், இலங்கையை மேலும் போட்டித்தன்மையை வாய்ந்ததாக மாற்றி அமைக்க சர்வதேச மட்டத்தில் உறுதிபூண்டுள்ளோம்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.